Thursday 17 May 2018

என் இனிய நினைவுகள்

நான் அப்போது தாயகத்தில் ஆசிரியையாக  இருந்தேன்.  கடைசி இரண்டு வருடங்கள் அம்மா, அப்பா, நான் என்ற அழகான மிகச்சிறிய கூட்டுறவு.  மூவருமாக பாடசாலை வளாகத்தில் உள்ள குவாட்டஸ் இல் குடியிருந்தோம்.
குவாட்டசும் மிகச்சிறியதுதான்.  ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, ஒரு சிறிய சமையலறை அவ்வளவுதான்.   ஆனாலும் மிகவும் அழகானது.  நான் காலையில் எழுந்து பாடசாலைக்கு போய்விடுவேன்.  என் விடுதிக்கும் பாடசாலைக்குமான தூரம் இருபது மீற்றர் கூட இருக்காது.  எனக்கு வேண்டிய தேனீர் காலை உணவு எல்லாவற்றையும் அம்மா தயாரித்து தருவார்.  கடைக்குப் போகிற வேலைகள் எல்லாவற்றையும் அப்பா கவனித்துக் கொள்வார்.   நான் பாடசாலையில் இருக்கும் போது அம்மா மதிய சமையலை கவனித்துக் கொள்வார்.  நான் பதினொரு மணிவாக்கில் தேனீர் இடைவேளைக்கு விடுதிக்கு வருவேன்.   அது பதினைந்து நிமிட இடைவெளி தான்.  எனக்கு தேனீர் குடிக்கும் பழக்கம் இல்லை.  ஆனல் எதாவது சாப்பிடுவேன்.  ஐந்து நிமிடங்களில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு பத்து நிமிடங்கள் அம்மாவுக்கு ஒத்தாசையாக குசினி ஒதுக்கி கொடுப்பேன்.  பின் மீண்டும் பாடசாலை.  மதியம் இரண்டு மணிக்கு முடியும்.  நேரம் கிடைக்கின்ற வேளைகளில் பாடசாலை நூலகத்துக்கு செல்ல தவறுவது இல்லை.  பழைய புத்தகங்களை கொடுத்து விட்டு புதிய புத்தகங்களை மாற்றிக் கொள்வேன்.  அவை அநேகமாக கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்,  பெரிய புராணம்  போன்ற இந்து சமயப் புத்தகங்களாகத் தான் இருக்கும்.  பாடசாலை விட்டு விடுத்திக்கு வரும்போது சாப்பாட்டு மேசையில் மதிய உணவு சுடச்சுட தயாராக இருக்கும்.  அம்மா பாசத்துடன் சமைக்கிற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.

மதிய உணவு முடிந்ததும் நேராக கட்டிலுக்கு போய்விடுவேன்.  நூலகத்தில் இருந்து கொண்டுவந்திருந்த புத்தகங்ககளை கட்டில் மேல் வைத்து விட்டு ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவேன்.  ஒரு பத்து நிமிடங்கள் செல்லுமுன்பே நல்ல சுகமான தூக்கம் ஒன்று வரும்.  எந்த இடையூறும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தூங்குவேன்.  தூங்கி முடித்து எழுந்த உடனேயே குளிக்க வேண்டும் என்று தோன்றும்.  அந்த நேரத்தில் நான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக எனக்கு ஒரு உணர்வு.  அந்த நேரத்தில் யாருடனும் பேசுவதற்கு எனக்கு பிடிக்காது.  அம்மா அப்பாவுடனும் பேசாமடடேன்.  வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்திருந்தாலும் பேசாமடடேன்.   தூங்கி எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் யாரையும் பார்க்காமல் நேரே குளிக்க செல்வேன்.  குளித்து முடித்தவுடனே மறுபிறவி எடுத்தது போல இருக்கும்.  மீண்டும் என் அறைக்கு சென்று தலை சீவி போட்டு பவுடர் பூசி பொட்டு வைத்துக் கொள்வேன்.  அப்போது கண்ணாடியில் என்னை பார்க்கும் போது நான் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுவேன்.  ஒருமுறைக்கு பலமுறை கண்ணாடி பார்த்து என்னை நானே ரசித்துக்கொள்ளுவேன்.

நான் அறையை விட்டு வெளியே வரும்போது வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தொடங்கி இருப்பார்கள்.  விருந்தினர்கள் என்றால் என்னுடன் கூடப் படிப்பிக்கின்ற மாஸ்ரர்கள் தான்.  அவர்கள் என்னைவிட  வயதிலும் சேவைக்காலத்திலும் இளையவர்கள்.  அவர்களை நண்பர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம் அல்லது தம்பிகள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.  ஆரம்பத்தில் என்னுடைய தம்பிகள் அல்லது நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.  ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் என் அம்மா அப்பாவின் நண்பர்களாக அல்லது மகன்களாக ஆகிவிடடார்கள்.  கேலியும் அரடடையும் கிண்டலுமாக வரவேற்பறை களை கட்டும்.  அம்மா அனைவருக்கும் தேனீர் தருவார்.  அமிர்தம் போல இருக்கும்.  நான் மிகவும் உற்சாகமாக இருப்பேன்.  வரவேற்பறையில் பெரியதொரு இயேசு படம் வைத்திருந்தேன்.  அதை ஒட்டி ஒரு சிறிய மேசையும் இருந்தது.  அந்த மேசையில் பூத்தட்டு, படத்து விளக்கு , செபப்  புத்தகம், பைபிள் என்பன வைத்திருப்பேன்.  அவற்றை மீண்டும்  புதுப்பிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றும்.  நான் எழுந்து அந்த மேசையை துடைத்து பழைய பூக்களை அகற்றி புதிய பூக்கள் இடுங்க செல்வேன்.  பாடசாலை வளாகத்திலேயே ஒரு நித்திய கல்யாணி மரம் இருந்தது.  நான் அதில் தான் பூக்கள் இடுங்குவேன்.  என் விருந்தினர்கள் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.  அவர்கள் அம்மா அப்பாவுடன் தொடர்ச்சியாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.

நான் பூக்கள் இடுங்க நித்திய கல்யாணி மரத்தடிக்கு செல்லும் அதேநேரத்திற்கு ஒரு சிறுமியும் பூக்கள் இடுங்க வருவாள்.  அவள் எதேச்சையாக வருகிறாளா அல்லது என்னைக் கண்டவுடன் வருகிறாளா எனது தெரியவில்லை.  அவள் எனது பாடசாலையில் முதலாம் வகுப்பில் படிக்கிறாள்.  அவளுக்கு நான் ஆசிரியை என்று தெரியாது.  நான் பத்தாம் வகுப்பு ஆசிரியை.  எனவே அவள் பாடசாலையில் என்னைக் கண்டிருக்க வாய்ப்பு இல்லை.  அது தவிர நான் பாடசாலை வேலைகளில் சேலையில் இருந்தாலும் ஏனைய வேளைகளில் கவுனுக்கு மாறிவிடுவேன்.   அவளுக்கு நான் ஆசிரியை என்று தெரியாததால் ஒரு தோழியுடன் உரையாடுவது போல என்னுடன் உரையாடுவாள்.  நீ நான் என்று ஒருமையில் அழைப்பாள்.  வாய் மூடாமல் பேசுவாள்.  ஏதோ ஒரு நாளில் அவளிடம் நான் ஓர் ஆசிரியை என்று சொன்னேன்.  அவள் கடைசி வரையும் நம்பவே இல்லை.  நானும் விட்டு விட்டேன்.  அவளின் அழகான நட்பை இழக்க எனக்கும் விருப்பம் இல்லை.

எந்த அவசரமும் இல்லாமல் நின்று நிதானித்து என் சிறு தோழியுடன் பல கதைகள் பேசி பூப்பறித்துக்கொண்டு விடுதிக்குள் வரும்போது சற்றே சூரியன் மறையத்தொடங்கும்.  நான் பூக்களை படத்தட்டில் வைத்து படத்துக்கு விளக்கு ஏற்றி  வரவேற்பறை மின்விளக்கை ஏற்றும் போது வரவேற்பறை சுத்தமாக, ரம்மியமாக, தெய்வீகமாக காட்சி அளிக்கும்.  அப்போதும் என் மாஸ்டர் தோழர்கள் போய் இருக்க மாட்டார்கள்.  அவர்களின் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும்.  நான் அப்பாவின் கதிரை கைப்பிடியில் வந்து அமர்வேன்.  அவர்கள் உரையாடல்களில் நானும் பங்கு பெறுவேன்.  பின்பு ஒரு கட்டத்தில் அவர்கள் போக மனம் இல்லாமல் எழுந்து போவார்கள். 

நாங்கள் இரவுக்கு என்று புதிதாக சமைப்பது இல்லை.  மதியம் சமைத்து சோறு கறிகளையே சூடு பண்ணி சாப்பிடுவோம்.  எப்போதாவது இரவு சாப்பாடு செய்ய வேண்டி வரும்.  அப்போது நான் நூடில் செய்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிமாறுவேன்.

அந்த இனிமையான எளிமையான நாட்கள் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தன.  எனக்கு விசா கிடைத்தது.  என் கணவருடன் இணைவதற்காக நான் பிளேன் ஏறினேன்.  என் பெற்றோரை பிரிந்த அந்த நாள் என் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது போல வேதனை அளித்தது.  என் பிரிவுத் துயரை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.  ஆனாலும் என் கண்கள் கண்ணீர் வடிக்கவில்லை.  என்னை பெற்றவரின் கண்களும் தான்.

என்னை வழியனுப்ப என்று என் மாஸ்ரர் தோழர்கள் வரவில்லை.  அவர்களுக்கு நேரம் இருக்கவில்லையாம்.  ஏதோ அவசர வேலையாம்.  ஆண்கள் அழுதால் அசிங்கம்.  அப்படி அசிங்கப்பட விருப்பம் இல்லாமல் தான் என்னை வழியனுப்ப வரவில்லை என்று பிறிதொரு நாளில் கடிதம் எழுதியிருந்தார்கள்.

என் நித்திய கல்யாணி மரத்தடி குட்டித் தோழிக்கு எதுவும் தெரியாது.  திடீர் என்று நான் காணாமல் போனது அவளுக்கு கவலை அளித்திருக்கும்.  அவள் பல நாட்கள் என்னை தேடி இருக்கக் கூடும்.

புலம் பெயர்ந்து வந்து இருப்பது வருடங்கள் ஆகி விட்டன.  அம்மா அப்பா முதிர் வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.   என் தோழர்கள் அவர் அவர் குடும்பம் என்று ஆகி இருப்பார்கள்.   ஆரம்பத்தில் கடிதப்போக்குவரத்து இருந்தது .  பின்பு அது நின்று விட்டது.  தொடர்பு இல்லாவிட்டாலும் இன்னும் இதயத்தில் குடியிருக்கிறார்கள்

Sunday 6 May 2018

IQ Option உம் நானும்

Bildergebnis für iq option


online இல் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு IQ Option பற்றியும் தெரிந்திருக்கும்.  இன்று வரை IQ option நேர்மையாகத்தான் இயங்குகின்றது..  நாம் withdraw பண்ணி இரண்டு அல்லது மூன்று நாட்களில் எமது கணக்கில் பணம் வந்து விடுகிறது.  அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.  பிரச்சனை எல்லாம் வேறு.  இதில் பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் எமக்கு  பூரணமான அறிவும் பயிற்சியும் அவசியம்.   அறிவும், பொறுமையும், பயிற்சியும் இல்லாமல் களம் இறங்கினால் எம் முதலீடு எல்லாம் வீணாகி விடும்.  வீணாகி விடும் என்றால் கூட பரவாய் இல்லை.   நொடிப்பொழுதில் வீணாகிவிடும்.  நான் எத்தனையோ காலமாக iq option உடன் அல்லாடுகிறேன்.  தோல்விகள் தான் மிகுதி.  எனக்கு பொறுப்பாக இருப்பவர் அவ்வப்போது தொலைபேசியில் ஆங்கிலத்தில் எதோ எதோ சொல்லித் தருவார்.  ஒன்றும் பயன் இல்லை.  சரி தாய் மொழி உதவுவது போல அந்நிய மொழி உதவுமா என எண்ணி YouTube ஐ நாடினேன்.  you tube  தம்பிகள் எல்லாம் தாய் மொழியில் நன்றாகத்தான் சொல்லித்தருகிறார்கள்.  ஆனால் எனக்குத்தான் அதிகம் புரியவில்லை.  நான் ஐம்பது வயது தாண்டியவள்.  ஒரு சிறுவர் பராமரிப்பாளர்.  என் உலகம் எல்லாம் சிறுவர் உளவியல், சிறுவர் வழிகாட்டல், சத்துணவு,  சிறுவர் விளையாட்டு என்பதாகத்தான் இருந்திருக்கிறது.  பங்குச் சந்தை,  நாணய மாற்று,  trading,
call, put என்பதெல்லாம் எனக்கு புரியவே புரிய மாட்டேன் என்று அடம் பிடித்தன.  ஆனாலும் புரிந்தவர் புரியாதவர் எல்லோருக்கும் உள்ள பொதுவான ஒரே பிரச்சனை பணப் பிரச்சனை தான்.  எனவே நானும் iq option ஐ விடுவதாக இல்லை.   எனக்கு இந்த உலக வர்த்தகம் புரியவிடடாலும் ஒன்று மட்டும் புரிந்தது.
நாளும் பொழுதும் இந்த வரைபுகளுடன் போராடியதில்  எனக்கு அவற்றுடன் ஒரு பரிச்சயம் ஏற்பட்டு விட்ட்து.

இந்த வரைபுகளை நான் கடல் அலைகளுக்கும் என்னை ஒரு மீனவருக்கும் ஒப்பிடுவேன்.  ஒரு அனுபவம் வாய்ந்த மீனவர் கடலின் நிறம், கடல் அலைகளின் போக்கு, காற்றின் தன்மை போன்றவற்றை வைத்து நிறைய விடயங்களை எதிர்வு கூறுவார்.  ஒரு மீனவருக்கு எல்லா நேரங்களிலும் கடல் ஒத்துழைப்பதில்லை   சில நாட்களில் மீன் பிடிபாடு  அதிகமாகவும் சில நாட்களில்  குறைவாகவும் இருக்கும்.  ஒரு மீனவருக்கு உள்ளது போன்ற அனுபவத்துடன் பயனுள்ள சிறு குறிப்புக்களை இங்கு தருகிறேன்.  iq option பற்றிய உங்கள் தேடலுடன் இந்த துணுக்குகளையும் சேர்த்து பயன் பெறுங்கள்.

வருமானமானது எல்லா வேளைகளிலும் ஒருமாதிரியானதாக இருக்காது.  சில நாட்களில் இழப்புக்களே மிகுதியாக இருக்கும்.  இந்த நாட்களில் மேலும் மேலும் இழக்காமல் trading ஐ நிறுத்தி விட வேண்டும் .   

சில நாட்களில் அல்லது சில நேரங்களில் வருமானம் கூடுதலாக இருக்கும்.  அனல் அடுத்து அரை மணியிலோ அல்லது ஒருமணியிலோ நிலைமை மாறிவிடும்.  அதிகம் உழைத்த ஆர்வக்  கோளாறில் உழைத்த பணத்தை இழந்து வவிடக்  கூடாது.  வெற்றியிலும் தோல்வியிலும் நிதானம் தேவை 

ஓடுமீன் ஓடி உறு மீன் வருமளவும் காவலிருக்குமாம் கொக்கு.  கொக்குக்கு இருக்கிற விவேகம் எமக்கும் இருக்க வேண்டும் தானே.  எமக்கு சாதகமான வரைபு வரும் வரையும் அது ஒரு சில மணித்தியாலங்களோ ஓரிரு நாட்களோ நாமும் காவலிருக்க வேண்டும் .

எனக்குப் பிடித்த வரைபுகளுடன் மீண்டும் தொடர்வேன் 

Saturday 5 May 2018

அரசியலும் நகைச்சுவையும் நடிக்கனும்

Bildergebnis für கமல், வடிவேலு, லியோனி
லியோனி பட்டி மன்றங்கள், லியோனி நகைச்சுவை, லியோனி பாட்டு எனக்கு ரெம்பவே பிடிக்கும்.  லியோனி வாய் திறந்து பேசினாலே அது நகைச்சுவை தான்.  லியோனி தி .மு.க.  பேச்சாளர்.  தி மு க கட்சியின் பெருமைகளையும், கலைஞரின் பெருமைகளையும் மேடைகளில், கூட்டங்களில் பேசவேண்டியது அவரது கடமையாகிறது.     அதையும் தாண்டி எதிர்க்கட்ச்சிக் காரரையும் கிண்டல் பண்ண வேண்டியது அவர் கடமையாகிறது.  இந்த கிண்டலுக்காக அவர் தனக்கு இயல்பாக வருகின்ற நகைச்சுவையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்.  இந்த ஒரு கட்டத்தில் எனக்கு லியோனி நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போகிறது.  கமல், ரஜனி என யாரையும் அவர்  விட்டு வைக்கவில்லை.  கலாய்த்து தள்ளுகிறார் மனிதன். 

எனக்கு கமல் பிடிக்கிறது.  கமலின் அரசியல் தமிழ் நாட்டை முன்னேற்றும் என்று ஒரு சாராரும் தமிழ் நாட்டை பின்னேற்றும் என்று ஒரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது பற்றி மிக ஆழமாக அலசி ஆராய எனக்கு அறிவு போதவில்லை. ஆனாலும் எனக்கு கமல் அரசியல் பிடிக்கிறது.  நிச்சயமாக இது சினிமா ரசனை இல்லை.  கமலா லியோனியா வயதில் மூத்தவர் என்று எனக்கு தெரியவில்லை.  கமல் 60 வயது தாண்டியவர் என்றாலும் அவரின் சகல  அணுகு முறைகளிலும் இளமையும், புதுமையும், உற்சாகமும் தெரிகிறது.  அதே நேரத்தில் பேசுகிற பேச்சுக்களில் வயதின் நிதானமும் கண்ணியமும் தெரிகின்றது.  நகைச்சுவை செய்வதிலும்,  நகைச்சுவை உணர்விலும்  கமல் சளைத்தவரா என்ன?  அனாலும் தனக்குள் இருக்கிறன்ற அந்த மாபெரும் கலைத்திறமையை கமல் அரசியலுக்காகவும் பேடைப் பேச்சுக்காகவும் பயன்படுத்த வில்லை.  இந்த இடத்தில் நகைச்சுவையின் கண்ணியமும்  அரசியலின் கண்ணியமும் காப்பாற்றப் படுவதாக உணர்கின்றேன். 

கலைஞர் அரசியல் எனக்கு ஆகவே ஆகாது.  எனக்கு மட்டும் அல்ல எந்த தமிழீழத்தவனுக்கும் ஆகாதுதான்.  கலைஞர் இரு வேறு மனிதர்.  ஒன்று பழுத்த அரசியல்வாதி.  மற்றது கலைஞர்.  அளவிட முடியாத தமிழ் அறிவைக் கொண்டவர்.  தன்னுடைய தமிழ் அறிவை எதிர்க்கட்சிக் காரரை கிண்டல் அடிப்பதற்காக அவர் பயன்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.  தனக்கென்று பிரத்தியேகமாக இருக்கிற தமிழ் வளத்தின் கண்ணியத்தை  அவர் சிறுமைப்படுத்தவில்லை.  அந்த விடயத்தில் அவர் என் மனதில் சற்று இடம் பிடிக்கத்தான் செய்கிறார்.

Bildergebnis für கமல், வடிவேலு, லியோனி
வடிவேலு என்னும் மாபெரும் நகைச்சுவை நடிகன் தனக்குள் பொதிந்திருந்த நகைச்சுவை என்னும் அற்புதக் கொடையை அரசியலுக்காக பயன்படுத்தி வேகம் குறைந்து போனது உண்மைதானே.  அது பற்றி அவர் ஆயிரம் விளக்கங்கள் கூறலாம்.  அவர் திருப்தியாகக் கூட வாழலாம்.  அனாலும் அவர் நகைச்சுவையை இழந்து தவிக்கின்ற எம் போன்ற ரசிகர்களுக்கு அது மாபெரும் இழப்பு தானே.

முன்பு போல வடிவேலுவை காணக்கிடைக்காததும் எனக்கு வருத்தம் தான்.  லியோனி நகைச்சுவையை ரசிக்க முடியாமல் இருப்பதுவும் வருத்தம் தான் 

Thursday 3 May 2018

கருப்பழகி நிஷா அக்கா

Bildergebnis für நிஷா அக்கா அறந்தாங்கி 


நிஷா அக்கா நீ ரெம்ப அழகானவள்.  உன் மேடைகள் உன் அதிஸ்ரங்கள் அல்ல.  உன் கடின உழைப்பிற்கான பரிசுகள் அவை.  ஒருகாலத்தில் நீ வளர்ந்து கொண்டிருந்தவள்.  ஆனால் இப்போது நீ வளர்ந்து விட்டவள்.  ஒரு கலைஞனின் வளர்ச்சிக்கு எல்லையேது என நீ வாதிடக்கூடும்.  அனாலும் நீ கணிசமான அளவு வளர்ந்துவிட்டவள்தான்.  இப்போது உனக்கு சமூகப் பொறுப்புகள் அதிகம்.

நீ வளர்ந்து கொண்டிருந்த காலங்களில் உன் அழகிய கருமை நிறத்தை நகைச்சுவைப் பொருளாக்கி நிகழ்ச்சி செய்தாய்.  நடுவர்கள், சகபோட்டியாளர்கள், விருந்தினர்கள், பேட்டி காண்பவர்கள் அனைவரும் உன் நிறத்தை வைத்து நகைச்சுவை செய்ய அனுமதித்தாய்.  அதை நான் கூட ரசித்திருக்கிறேன்.  இப்போது நீ நன்றாக வளர்ந்து விட்ட பின்பும் இந்த நகைச்சுவை தேவையா?  கொஞ்சம் யோசி.  தமிழ் பேசுகின்ற அத்தனை கருப்பு அழகிகளினதும் பிரதிநிதி நீ.   ஏனைய கருப்பு அழகிகளுக்கு கிடைக்காத மேடை உனக்கு கிடைத்திருக்கிறது.  இந்த மேடையை நீ சரியாகப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.  கருப்பு என்பது மிகவும் அழகானது என்பதை நீ வலியுறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.  உன் சுயநலத்துக்காக இதை நீ நகைச்சுவை பொருளாகும் போது ஏனைய கறுப்பழகிகளின் உள்ளம் காயப்பட்ட வாய்ப்பிருக்கிறதல்லவா?  விசேடமாக குழந்தைகள் பருவ வயதுப் பெண்பிள்ளைகள் உள்ளம் வாடத்தானே செய்வார்கள்.  அவர்களின் தன்னம்பிக்கை சிதைந்து போகுமே.
அவர்களின் தன்னம்பிக்கையை கட்டி எழுப்புகின்ற கருவியாக உன்னை நீ மாற்றிக்கொள்ள மாட்டாயா நிஷா அக்கா
கருப்பு என்பது அழகின்மை என்னும் மனப்பான்மையை நீ உன் மேடைகளினுடாக மாற்ற வேண்டும் .   

ஆணாதிக்க மனப்பான்மையும் விவேக்கின் சர்ச்சைக் கருத்தும்

 Bildergebnis für விவேக்
 இந்தக் கோடை விடுமுறையில் ஆண்பிள்ளைகள் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் பெண்பிள்ளைகள் தாயிடம் இருந்து சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.   அதில் அவர் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் என்று பேதம் பிரித்து எழுதியதனால் அது இப்போ சர்ச்சையில் வந்து நிற்கிறது. 

ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் எனப் பேதம் பிரித்து எழுதாது தனியே பிள்ளைகளே என விழித்து எழுதியிருந்தால் அது ஒரு மிக அருமையான கருத்து.   இந்த ஆணாதிக்க சர்ச்சையில் அந்த அருமையான கருத்து அடிபட்டுப் போய்விட்டது சற்றுக்  கவலை தான்.

என் மகனுக்கு பதினைந்து வயது.  ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறார்.  சனிக்கிழமைகளில் தந்தையுடன்  சேர்ந்து அவர் வேலை செய்கின்ற உணவகத்துக்கு செல்கின்றார்.  அங்கு அவர் செய்கின்ற வேலைக்காக அவருக்கு சம்பளமும் கிடைக்கின்றது.  ஒவ்வொரு மாதமும் 100- 200 யூரோக்கள் சம்பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.  அது மட்டும் இல்லாமல் ஒரு தொழில் பழகியதாகவும் இருக்கிறது .  அத்துடன் செல்போன் இண்டநெட்  என்று சோம்பேறித்தனமாக நேரம் வீணடிப்பதும் குறைகின்றது.  அது மட்டும் அல்லாமல் தாயக சமையல் பழக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.  இப்போது அவருக்கு மீன் குழம்பு வைக்கத்தெரியும்.  சமையல் அறையில் இருக்கும் போது நானும் அவரும் அதிகம் பேசுவோம்.  எம் பேச்சுக்களில் பலவிடயங்கள் அடங்கும்.  அவர் எனக்கு சரித்திர ஆசிரியராக மாறி அதிக விடயங்கள் சொல்லித்தருவார்.  மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்வேன்.

இப்போது விவேக்கிற்கு வருவோம் .  விவேக் நல்ல மனிதர்.  நல்ல கருத்துக்களை மட்டுமே பகிர்பவர்.  அவர் ஒரு ஆணாதிக்க கருத்தை வெளியிட்டது.  ஒரு கணம் அதிர்ச்சி தந்தாலும் சுதாகரித்துக் கொண்டேன்.  நாம் எல்லோரும் ,வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர் உட்பட ஆணாதிக்க சமூகத்தில் வாழ்பவர்கள்.  ஆணாதிக்க மனப்பான்மை என்பது எம் ஒவ்வொருவருக்குள்ளும் புரையோடிப்போய் இருக்கிறது.  ஆணாதிக்க மனோபாவம் என்பது ஆண்களுக்குள் மட்டுமல்லாது பெண்களுக்குள்ளும் தான் புரையோடிப்போய் இருக்கிறது.   இதில் நாம் யாருமே விதிவிலக்கு இல்லை. மற்றவர் ஒரு கருத்தை தெரிவிக்கும் போது இதில் ஆணாதிக்கம் கலந்திருக்கிறது என்று   இனம் காணத்தெரிகிற எமக்கு, எமக்குள் எவ்வளவு வீதம் ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறது என்பது புரிவது இல்லை இந்த விடயத்தில் விவேக்கை கோவிக்ன்ற தகுதியை இதனால் நாம் இழக்கின்றோம்.

அனாலும் சர்ச்சை என்று வந்தது நல்ல விடயம் தான்.  நாகரிகமாக விவாதித்து ஆணாதிக்க மனோபாவத்திற்கு எதிரான நல்ல கருத்துக்களை பகிர்வதற்கு இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம்.  காலம் காலமாக புரையோடிப் போயிருக்கிற ஒரு விடயத்தை அவ்வளவு சுலபமாக  எமக்குள் இருந்து அகற்றி விட முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அகற்ற முடியும்.  அதற்காக இந்த சர்ச்சையையும் ஒரு சிறு கருவியாக பயன்படுத்துவோம்.
விவேக் என்கின்ற நல்ல மனிதனை கொத்திக் குதறுவதை தவிர்த்து விடுவோம்