Friday 17 May 2013

தமிழ் சினிமாவிற்க்கு யாரைத்தான் வில்லனாகச் சித்தரிப்பது.



இனி கொசுக்களைத்தான் வில்லனாக காட்ட வேண்டும்: என ஆதங்கத்துடன் இயக்குனர் ரவிக்குமார் பேசியதை எப்போதோ இணையத்தில் வாசித்தேன்.   குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்தவர்களையோ ஜாதியைச் சார்ந்தவர்களையோ வில்லனாகச் சித்தரித்தால் சம்பந்த்தப்பட்டவர்கள் சண்டைக்கு வந்துவிடுகின்றார்கள், என்று அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.வாசித்த போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. இப்போது தான் வேளை வந்தது.

எனக்கு பன்மொழிப் படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டு.  அதிலே வருகின்ற விதவிதமான திரைக் கதைகளை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எம் தமிழ்ப் படங்களில் எல்லாம் இப்படிக் காட்சிகள் வராதா என எண்ணியிருக்கிறேன்.

என்ன மொழிப்படம், யார் தயாரித்தது, யார் இயக்கியது, யார் நடித்தது என்று எல்லாம் கேட்டு விடாதீர்கள். நான் ஒரு அப்பாவிக் குடும்பத்தலைவி.  இரவு வேளைகளில் இரவு உணவு சமைத்து, பிள்ளைகளிற்க்குப் பரிமாறி, அவர்கள் அடுத்தநாள் பாடசாலைக்கு ஆயத்தமாக இருக்கிறார்களா என்பதைக் கவனித்து, அவர்களைப் படுக்கைக்கு அனுப்பி, அதன் பின்பு வீடு வாசல் ஒதுக்கி, ஈர உடைகள் உலரவிட்டு, அதன்பின்பு நடுசாமம் தாண்டி வேலை முடித்து வீடு வருகின்ற கணவருக்கு காவல் இருக்கின்றவேளைகளில் ரீவியை முடுக்குகின்ற போது என்ன படம் வருகின்றதோ அதைப் பார்க்கின்ற ரகம் நான்.  நான் ரீவியை முடுக்குகின்றபோதுதான் படம் ஆரம்பித்திருக்கும் என்று சொல்லமுடியாது.  ஆரம்பத்தில் இருந்து படம் பார்ப்பது என்பது என் வாழ்க்கையில் இல்லவே இல்லை.  இப்போ அதுவா முக்கியம்.  விடயத்திற்க்கு வருகின்றேன்.  நான் பார்த்து ரசித்த இரண்டு படங்களைப்பற்றி எழுதுகின்றேன்.

அது அந்நியரின் வருகைக்கு முன்னான செவ்விந்தியர்கள் பற்றிய படம்.  படத்தில் கதாநாயகனை வில்லன்கள் துரத்துகின்றார்கள்.  கதாநாயகன் அடர்ந்த மழைக்காடு ஒன்றினை ஊடறுத்துக் கொண்டு ஓடுகின்றான், ஓடுகின்றான்,  படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கின்றான்.  படம் முழுவதுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சைப் பசேல்தான். வில்லன்களின் அச்சுறுத்தலைத் தாண்டி இடைநடுவே புலியும் கரடியும் பாம்பும் நிலைக்குத்தாகப் பாயும் நீர்வீழ்ச்சியும் அவனை அச்சுறுத்துகின்றன.  இயக்குனர் பார்ப்பவரை அடர்ந்த மழைக்காட்டிற்க்கு அழைத்துச் செல்கின்றார்.  பார்ப்பவருக்கு மழைக்காடுகள் பற்றிய அறிவு வளர்கின்றது.  இங்கு படத்தின் முக்கிய வில்லன் அழகிய இயற்க்கையும் அது தருகின்ற இடைஞ்சல்களும் தான்.

இன்னுமொரு படம், பார்த்து எத்தனை ஆண்டு சென்றாலும் மனதை விட்டு அகலமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.  படம் தொடங்கி முடியும் வரையும் முழங்கால் வரைக்குமான வெள்ளை வேளேரென்ற பனி.  இந்த அழகான பனிதான் படத்தின் வில்லன்.  ஒரு அப்பாவி ஊமைக் கதாநாயகியும் அழகோ கவர்ச்சியோ இல்லாத முரட்டுத்தனமான அழுக்கு நிறைந்த கதாநாயகனும் காலநிலையுடன் படுகின்ற பாடுதான் கதை.  ஒரு பெண்ணைக் கவருவதற்க்கு என்று அவனிடம் எதுவும் இருக்கவில்லை.  அவன் அந்த்தப் பெண்ணை அடிமையாக விலைக்கு வாங்கி அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத தன் குக்கிராமத்துக்குக் கூட்டிக் கொண்டு வருகின்றான்.  அவனை வெறுப்பதிலும் குளிருடனும் பனியுடனும் போராடுவதிலுமே அவள் பாடு கழிகின்றது.  சிறிது காலம் ஒரே குடிசையில் போராடி வாழ்ந்த பாசம் காதலாக மலர, வசதியாக வாழ வாய்ப்புக் கிடைத்த போதிலும் ஒரு காலை இழந்த்த நொண்டிக் கதாநாயகனுடன் வசதிகள் அற்ற குக்கிராமத்தில் மீண்டும் வாழ வருகிறாள் அந்த ஊமை தெய்வப் பெண்மணி

ஏதோ மனதில் பட்டதை எழுதுகின்றேன்.  இப்படிப் படங்கள் தமிழிலும் வரவேண்டும் என்று ஒரு ஆதங்கம் தான்.  






Monday 13 May 2013

எம் கலாச்சாரத்துக்கு ஒரு 'ஸ்கான் ரெஸ்ற்' தேவை


எனது நாற்ப்பதாவது பிறந்ததினத்தின் போது எனது மருத்துவக் காப்புறுத்தி நிறுவனத்திடமிருந்து வாழ்த்து அட்டை வந்திருந்தது.  கூடவே ஒரு கடிதமும் வந்திருந்தது.   எனக்கு நாற்ப்பது வயது ஆகிவிட்டதாம்; ஏதாவது நோய்நொடி பீடித்திருக்க வாய்ப்பு இருக்கிறதாம்; எனவே ஒரு முறை வந்து ஒரு முற்றுமுழுதான மருத்துவப் பரிசோதனைக்கு என்னை உட்படுத்த வேண்டுமாம்;  அந்த்தக் கடிததின் சாரம் இதுதான்.  சாதாரணமாக நான் நல்ல சுகதேகியான ஆள்.  அந்த ஆணவத்தில் கடிதத்தை தூக்கி மூலையில் போட முடியவில்லை.  வயது என்று ஒன்று ஆகிறதே.  வாலச் சுருட்டிக் கொண்டு போய் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு வந்தேன்.

இந்த நிகழ்ச்சி எனக்குள்ளே வேறு ஒரு சிந்தனையைத் தூண்டியது.  அதைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நாம் எம் கலாச்சாரத்தில் நாம் நல்ல மதிப்பு வைத்திருக்கின்றோம். எம்முடையது மிகவும் பழைமையான கலாச்சாரம் என்று சொல்வதில் எமக்கு அலாதி பெருமை.  அதனால் தான் சொல்கின்றேன், எம் கலாச்சாரத்துக்கும் ஒரு முற்று முழுதான மருத்துவப் பரிசோதனை தேவை.

 எம் கலாச்சாரம் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்றுபிடிவாதமாக நம்புபவர்களும் எம்க்குள் இருக்கின்றோம். அதே போல மறுகோடிக்குச் சென்று எம் கலாசாரம் பட்டிக்காட்டுத்தனமானது என்று இதற்குள் இருக்கின்ற நல்ல விடயங்களை இழந்து விடுகின்றவர்களும் எமக்குள் இருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரையில் ஆளாளுக்கு சொந்தக்கருத்து சொல்கின்ற விடையமில்லை இது.  நானெல்லாம் யார்? வெறுமனே கேள்வி எழுப்பக் கூடிய ஒரு சாதாரண பழய ஆசிரியை, அம்மா, மனைவி, ஒரு சிறுவர் பராமரிப்பாளர்.  ஒரு விடையத்தைச் சரியென்று சொல்வதற்க்கோ, பிழையென்று சொல்வதற்க்கோ எனக்குள் இருக்கிற அறிவு போதாது.  போதவே போதாது.

தொழில்சார் வல்லுனர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உளவியல் அறிஞர்கள் எம் கலாச்சாரம் சார்ந்த பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை அலசி ஆராய வேண்டும்.  அது பற்றிப் பொது மக்களிடம் நிறையப் பேச வேண்டும்.  எடுக்கப் படுகின்ற திடமான முடிவுகள் சினிமாவாலும் நாவல்களாலும் சிறுகதைகளாலும் பேசப்படவேண்டும்.

ஒருகாலத்தில் இந்த அரவாணிகளைப் பாடாய்ப்படுத்தியவர்கள் நாங்கள்.  ஆனால் இப்போ நிலமை மிகவும் மாறிவிட்டது.  நாம் அவர்களைப் புரிந்து கொள்கின்றோம், மதிக்கின்றோம், அங்கீகரிக்கின்றோம்.  இதற்க்குக் காரணம் எமக்குள் ஏற்ப்பட்ட விஞ்ஞான மருத்துவ அறிவு வளர்ச்சிதானே.  சம காலத்திலேயே காஞ்சனா சினிமாப்படத்தைத் தந்து லாரன்ஸ் சமூகத்திற்க்கு அற்புத சேவையாற்றி இருக்கிறாரே.

இதே விதமாக எம் வாழ்க்கைமுறையின், நம்பிக்கைகளின், கலாச்சாரத்தின் ஒவ்வொரு கூறுகளும் புத்தி ஜீவுகளினால் அலசி ஆராயப்ப்ட வேண்டும்.


Friday 10 May 2013

வாழ்ந்த்து காட்டும் கமலஹாசன் கௌதமி


நான் ஒன்றும் அதி தீவிர சினிமா ரசிகை அல்ல.       சினிமாக்காரர் பற்றி எனக்கு அதிகம் தெரிந்து இருப்பதும் இல்லை.  இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக கமல், கௌதமி இணைந்தது கண்ணில் பட்டது.  இருவருக்கும் தனித்தனியான கடந்தகாலங்கள் இருந்த்தன.  கடந்த்தகாலம் கடந்தகாலமாகவே முடிந்த பின்பு, தொக்கி நிற்க்கும் எதிர் காலத்தை சோகமும் ஏக்கமும் நிறைந்ததாகக் கழிக்க விரும்பாமல் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழ விரும்பும் இருவர் எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான முடிவு அது.

இணையத்தில் உலவியபோது என் கண்ணில் பட்டது கமல் கௌதமி இணைந்த செய்தி மட்டும் அல்ல.  அவர்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கிரார்கள் என்ற முறைப்பாடுகளும் தான்.

அந்த முறைப்பாடுகள் தான் எனக்கு சற்று நெருடலாக இருக்கின்றன.  இங்கு வெள்ளைக் காரர் மத்தியில் இது எல்லாம் சகஜம்.  உடனேயே தொடங்கி விடுவோமே, “வெளைக்காரர் எல்லாம் சீரழிந்து போகும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள், ஆனால் தமிழர்களாகிய நாமோ கட்டுக்கோப்பான கலாச்சாரத்தைக்கொண்டவர்கள்” , என்று.  எழுந்தமானத்துக்கு இப்படி ஒற்றைவரியில் கூறிவிட்டால் சரியா?

மறுக்க முடியாத கசப்பான உண்மை ஒன்று உண்டு.  அளவுக்கு அதிகமான பாலியல் வல்லுறவுகள் நடைபெறுவது கட்டுக்கோப்பான கலாச்சாரமுடைய கீழைத்தேசங்களில்தான்.  பூர்த்தி செய்யப்படாமல் அடக்கி வைக்கப் படும் பாலியல் உணர்வுகளும் தேவைகளும் தான் இத்தகைய பாலியல் வல்லுறவுகளுக்கு வழிகோலுகின்றன.  இப்படியான மோசமானவர்களாகத் தாங்கள் மாறிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் வெள்ளைக்காரர்கள் கட்டுப்பாடுகள் குறைந்த இலகுவான வாழ்க்கை முறையை வாழ்கின்றார்கள்.

இந்த வகையில் கமலகாசன், கௌதமி தேர்ந்தெடுத்திருக்கும் இப்புதிய வாழ்க்கை முறையை குறை சொல்ல எனக்கு மனம் வரவில்லை.  சாதாரணமாக ஒரு பிரபல்யமான நடிகரின் நடை, உடை, பாவனைகள் அவரது ரசிகர்களால் பின்பற்றப் படுவத்து வழக்கம்.  அந்த வகையில் அவரது வாழ்க்கை முறைபின்பற்றப்படவும் சாத்தியம் உண்டு.

காலப் போக்கில் அழுத்தங்கள் அற்ற இலகுவான வாழ்க்கை முறை கீழைத்தேசங்களிலும் வரக்கூடும்.  துணிவுடன் புதுமை புகுத்துகின்ற கமல்ஹாசன் கவுதமிக்கு என் வாழ்த்துக்கள்.






Wednesday 8 May 2013

காதலுக்கு அழகான விளக்கம் தந்த நடிகை ஸ்ரீதேவி


காதலுக்கு ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு விட்டன.  அவர் அவர் கோணத்தில் அவர் அவர் விளக்கங்கள் நியாயமாகப் படலாம். என்னைப் பொறுத்தவரையில் காதலில் தோற்றவர்கள் சொல்லும் விளக்கங்களை விட, காதலில் வென்றவர்கள் சொல்லும் விளக்கங்கள் ஆரோக்கியமானவை என நான் நம்புகின்றேன்.  அதிலும் காதலுடனே பல காலம் வாழ்ந்தவர்கள் சொல்லும் விளக்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.  அந்த வகையில் நடிகை சிறீதேவி சொன்ன விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.

அதாவது, காதல் மூன்று அம்சங்களைஅடக்கியதாக இருக்க வேண்டும்.
1. நம்பிக்கை- ஒருவரை ஒருவர் சந்தேகங்கள் இன்றி நம்புதல்
2. பாதுகாப்பு-  ஒருவருக்கு வேண்டிய பாதுகாப்பை மர்றவர் வழங்குதல்
3. மதிப்பு-          ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல்.

இதில் மூன்றாவது அம்சம் தான் என்னை மிகவும் கவர்ந்தது.  புலம் பெயர் வாழ்வில் நான் நன்றாகவே பார்த்திருக்கிறேன்.  காதல் கடிமணம் புரிந்த வீடுகளில் வாக்குவாதங்களின் போது ஒருவரை ஒருவர் மதிக்காமல் வார்த்தையாடுதல் மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது.  அதிலும் விசேடமாக கணவன்மார்கள் தம் மனைவிமாரை திட்டும் விதங்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதவை.

எம் காதலர்களுக்கு தேவையான மதிப்பளிக்கவும், நம்பிக்கை வைக்கவும், தேவையான பாதுகாப்புக் கொடுக்கவும் பழகிக் கொள்வோமே.

.தனது காதலைப் பற்றி வெளிப்படையாகக் பேசும் ஸ்ரீதேவி - Manithan