Tuesday 30 April 2013

மெல்லத்தமிழ் இனி சாகத்தான் வேண்டுமா?

மிக அருமையான குறும் படம்.  பார்த்த நேரத்தில் இருந்து மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.  காலப்போக்கில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் அழியத்தான் போகிறதா.   தமிழ் அழியப்போகிறது, அழியப்போகிறது என்று உயிரை விடுகின்ற நாங்கள் ஏன் இன்னும் புலம் பெயர் நாடுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் தான் எப்போதோ முடிந்துவிட்டதே.

உண்மையிலேயே நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதற்கு யுத்தம் மட்டும் காரணமில்லை.  இந்த நாடுகளின் அதீதமான பொருளாதார வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவவளர்ச்சி, வேலை வாய்ப்புக்கள் என்பனவும் தான் காரணம்.


தமிழர்களாகிய நாம் எம்மையும் இவ் வளர்ச்சிகளுக்கெல்லாம் உட்படுத்தும் போது எம்முடைய மொழி தானாகவே சரிசமமான வளர்ச்சியைக் காட்டும்.  புலம் பெயர் நாடுகளிலே நாம் எல்லொரும் அந்தந்த நாட்டு மொழிகளை எம்முடைய மூன்றாம் மொழியாகக் கற்றுக் கொள்கின்றோம். இதனால் அவர்களுடைய மொழி அதீத வளர்ச்சி அடைகின்றது.  மற்ற நாட்டுக்காரர் எம்முடைய மொழியைக் கற்க முனைகின்ற அளவிற்கு நாம் பொருளாதாரத்திலும் தொழில் துறையிலும் முன்னேற வேண்டும்.

எப்போதும் எம் மொழியின் பழம் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது.  நாம் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறுவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.  இந்த வளர்ச்சிகளிற்கூடாக எம் மொழியை அழிவில் இருந்து காப்போம்.

Sunday 21 April 2013

எம்மவருக்குச் சாப்பிடத் தெரிவதில்லையாம், சொல்கிறார்கள் வெள்ளைக்காரர்கள்

இந்த வெள்ளைக் காரர்களில் இரண்டு வகையுண்டு.  தம்மைச்சூழவுள்ள புலம்புயர் 3ம் உலக நாட்டு மக்களை சினேகித மனோபாவத்துடன் அணுகுவது ஒரு வகையினர், அவர்களை உலகமகா பட்டிக்காடுகள், எதுவுமே தெரியாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பவர்கள் இரண்டாவது வகையினர்.  (எம்மவரில் கூட இப்படி இரண்டு வகையினர் இருக்கின்றோம்.  வெள்ளைக்காரர்களை சினேகித மனோபாவத்துடன் அணுகுவதுடன் அவர்களுடன் நட்பை ஏற்ப்படுத்தி அதில் நன்மை பெறுவது ஒரு வகையினர்.  வெள்ளைகள் என்றால் ஒழுக்கக் கேடானவர்கள் தீய பழக்கங்கள் நிறைந்தவர்கள் என்று அருவருப்புடன் அவர்களை நோக்குவது இரண்டாவது வகையினர்.  இதில் நான் முதலாவது வகை.)

என்னுடைய பராமரிப்பிற்கு வரும் மெல்லக் கற்கும் இயல்புடைய (slow learner) ஒரு குழந்தைக்கு விளையாட்டு மூலம் கல்வியூட்டுவத்தற்க்காக ஒரு ஆசிரியை  (A teacher for early education intervention) என் வீட்டிற்க்கு வாரம் ஒரு முறை வருவார்.  அவர் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரி.
அவர் எப்போதுமுமே எம் இனத்தின் பழக்கவழக்கங்களைத் தரம் தாழ்த்திப் பேசுவார்.  அது எனக்கு மிகுந்த மனவருத்ததைத் தரும்.  மன வருத்ததைத் தந்தாலும் அவரின் கருத்துக்களில் உண்மை இல்லாமல் இல்லை.  அவரின் கருத்துக்கள் பலதடவைகள் என்னைச் சிந்த்திக்க வைத்துள்ளன.

சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று என்னை உடனே சிரிக்க வைத்தாலும் சிந்த்திக்கவும் தூண்டியது.  ”உங்கள் ஆசியாக்காரருக்கு சரியான முறையில் சாப்பிடத்தெரிவதில்லை.  எல்லோரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்து சாப்பிடுவதில்லை.  சாப்பாட்டை தட்டுடன் எடுத்து வந்து ஆளுக்கொரு இடத்தில் இருந்து சாப்பிடுகிறீர்கள்.  முக்கியமாக் TV கு முன்பாக இருந்து TV பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறீர்கள்.  அது தவறு இல்லையா.  எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரு சாப்பாட்டு மேசை அருகே இருந்து சாப்பிடுவது தானே சரியான முறை.  அப்படிச் சாப்பிடும் போதுதானே குடும்ப உறுப்பினருக்கிடையே நல்ல தொடர்புகள் ஏற்ப்படும். அது தவிர சிறு பிள்ளைகளிர்க்கு முன்மாதிரிகையான சாப்பாட்டுப்பழக்கங்களைக் காட்ட முடியும்.” எனக் கூறினார்.

அவர் கூறியத்து ஒன்றும் தவறு இல்லையே.  சரியாகத்தான் கூரியிருக்கிறார். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.  தாயகத்தில் இருந்தவரையில் எமக்கு இந்த சேர்ந்து ஒரே இடத்தில் இருந்து உணவு உண்ணும் அழகிய பழக்கம் இருந்தது.  அவசரம் நிறைந்த இந்தப் புலம் பெயர் வாழ்க்கையில் தான் நாம் இந்தப் பழக்கத்தைக் கைவிட்டு விடோம்.

சேர்ந்து உணவு உண்பதில் ஆயிரம் நன்மைகள் கொட்டிக் கிடக்க நாம் ஏன் அதைக் கைவிட வேண்டும்.

Wednesday 17 April 2013

திணிக்கப்படாத கலாச்சாரம்

எம் கலாச்சாரம், பண்பாடு என்ற பதங்கள் புலத்தில் வாழும் தமிழர் மத்தியில் அடிக்கடி பயன்படுத்தப் படும் சொற்க்கள் ஆகும்.  தாயகத்தில் இருந்தவரையில் கலாச்சாரம் பண்பாடு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவ்சியம் இருக்கவில்லை.  ஏனென்றால் நாம் அதற்குள்ளேயே வாழ்ந்தோம்.  தண்ணீருக்கும் மீனுக்கும் உள்ள உறவு போல எமக்கும் எம் கலாச்சாரத்துக்குமிடையே உறவு இருந்தது.  ஆனால் புலத்தில் நிலமை எதிர்மாறாக இருந்தது.  அதனால் கலாச்சாரம் பண்பாடு பற்றிய கவலையும் புலம்வாழ் தமிழரை வாட்டி  வதைத்தது.  நியாயமான கவலையே.  புலத்தில் வாழும் எம் சந்ததிக்கு எதுவிதப்பட்டும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்திவிடவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினோம்.

இது ஒர் கட்டத்தில் கலாச்சாரத் திணிப்பாக மாறிப்போயிற்று.  இதில் அதிகம் அவஸ்த்தைப் படுவது சம்பந்தப்படும் எம் பிள்ளைகள்தான்.  மேலைத்தேயச் சூலலை விட்டு பெரிதும் விலகி நிற்கும் எம் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க அவர்கள் பெரிதும் சிரமப் பட்டார்கள்.  வீட்டில் ஒரு வாழ்க்கையும் வெளியே ஒரு வாழ்க்கையும் என இரட்டை வாழ்க்கை வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.  இந்தக் கலாச்சாரத்திணிப்பும் இரட்டை வாழ்க்கையும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு சிறுவர் பராமரிப்பாளராக சிறுவர் மீது அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது திணிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  இந்த விடயம் சதா என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையை, வாழ்க்கை முறையை தாமே தேர்ந்தெடுத்து வாழ்வதற்கேற்றவாறு தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  என் மன ஓட்டதிற்கு ஆறுதல் தருவது போல ஒரு சம்பவம் என் சூழலில் நடந்தது.

அந்த யுவதியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்.  தன்னுடைய பாடசாலைக் காலங்களில் எல்லாம் ஐரோப்பிய நாகரீகத்திலும், வாழ்க்கை முறையிலும் அதிக ஆர்வம் காட்டினார்.  தமிழர் என்றால் பட்டிக்காடுகள், நாகரீகம் தெரியாதவர்கள் என அபிப்பிராயம் கொண்டிருந்தார்.  தமிழர்களுடன் பழகுவதில் அலட்சியம் காட்டினார்.  இதனால் சூழ உள்ள தமிழர் மத்தியில் ஒரு விமரிசனப் பொருளானார்.

ஆனால் சமீபத்தில் அவர் பற்றிய செய்தி ஒன்று என்னை ஒரு முறை உலுக்கியது.  எல்லாம் மகிழ்ச்சியான உலுக்கல்தான்.  அவர் இப்போது திருமணமாகி தாயகத்தில் வாழ்கின்றார்.  ”என் மகள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து வாசல் தெழித்து சுத்தம் செய்து, குளித்து, சாமி கும்பிட்டு வேலைக்குச் செல்கின்றார்” ,என அவருடைய தாயார் பெருமிதமாக தன் மகளைப் பற்றிக் கூறினார்.  எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

புலத்தில் இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய தாயார் எம் கலாச்சாராத்தை தன் மகள் மீது திணிக்கவும் இல்லை, அந்த மகள் அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  தானே வாழ்ந்து பார்த்து தன் அனுபவ அறிவில் எம் கலாச்சாரத்தின் சிறப்பறிந்து அந்தக் கலாச்சாரத்தில் வாழ்வதற்க்காக துணிவுடன் முடிவெடுதிருக்கின்றார்.  அவரின் துணிச்சலுக்காக ஒரு கணம் தலை வணங்குகின்றேன்.

எம் கலாச்சாரத்தை புலத்தில் வாழும் எம் சந்ததிக்குத் திணிக்காமல் தமக்குரிய வாழ்க்கை முறையை அவர்களே தேர்ந்தெடுப்பதற்க்குச் சந்தர்ப்பமும் கால அவகாசமும் கொடுப்பது ஆரோக்கியமானது என் நான் கருதுகின்றேன்.




Tuesday 16 April 2013

ஒரு நாட்டின் கலாச்சாரமும் அடிப்படைத்தேவைகளும்


 எனக்கு மிகவும் பழக்கமான பெண்மணி அவர்.  ஐந்து பிள்ளைகளின் தாய்.  42 வயதாக இருக்கும் போது அவரது கணவர் இறந்து விட்டார்.  தாயகம் போலல்லாது உதவிக்கரம் நீட்ட அரசாங்க அமைப்புகள் ஆயிரம் உண்டு புலதிலே.  என்னதான் இருந்தாலும் வலி வலி தான்.  இழப்பு இழப்புத்தான்.  மிகவும் சிரமப்பட்டார் அந்தப் பெண்மணி.  உதவிக்கு வந்த அரசு அலுவலகத்தைச் சேர்ந்த பெண் அவரை மறுமணம் புரியும்படி அடிக்கடி ஆலோசனை கூறினார்.  கதை காற்றிலே பரவி வெளிவந்ந்தது.  ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கருத்துச் சொன்னார்கள்.  இதில் ஒருவர் சொன்ன கருத்து என்னை மிகவும் உலுக்கிப் போட்டது.  ”எங்கள் கலாச்சாரத்திலே கணவன் இறந்தால் மறுமணம் செய்வதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே.”  என்றவாறு அவர் தனது கருத்தைக் கூறியிருந்தார்.  இதில் எனக்கு உறுத்தலாக இருந்தது அவர் பாவித்த கலாச்சாரம் என்ற வார்த்தை தான்.

கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, அரவணைப்பு, பொருளாதாரம் என்று ஆயிரம் தேவைகள் தொக்கி நிற்கும்.  இந்த்தத் தேவைகள் எல்லாம் தேவைகளாகவே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லையே.  தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட வேண்டியவையே.  இன்னுமொரு ஆண்துணை அவரது தேவைகளை பூர்த்தி செய்யுமாயின் அவர் அதைத் தேடிக் கொள்வதில் என்ன தவறு.  இப்போ என் விவாதம் அது இல்லை.

கலாச்சாரம் என்பது தனிமனித, சமூகத் தேவைகளை சுதந்திரமாகப் பூர்த்தி செய்ய இடம் அளிப்பதாக இருக்கவேண்டும்.  அதை விடுத்து தனி மனித அடிப்படைத்தேவைகளை உதாசீனம் செய்வதாகவோ அல்லது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவோ இருக்கக் கூடாது.

ஒரு இனத்தின் கலாச்சாரம் எப்போதுமே ஆரோக்கியமானதாகவே இருக்கும்.    நாம் தான் அதை எம் இஸ்ரத்துக்குத் தப்புத்தப்பாகப் புரிந்து வைத்து இருக்கின்றோமோ என்னவோ.