Thursday 3 May 2018

ஆணாதிக்க மனப்பான்மையும் விவேக்கின் சர்ச்சைக் கருத்தும்

 Bildergebnis für விவேக்
 இந்தக் கோடை விடுமுறையில் ஆண்பிள்ளைகள் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் பெண்பிள்ளைகள் தாயிடம் இருந்து சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.   அதில் அவர் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் என்று பேதம் பிரித்து எழுதியதனால் அது இப்போ சர்ச்சையில் வந்து நிற்கிறது. 

ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் எனப் பேதம் பிரித்து எழுதாது தனியே பிள்ளைகளே என விழித்து எழுதியிருந்தால் அது ஒரு மிக அருமையான கருத்து.   இந்த ஆணாதிக்க சர்ச்சையில் அந்த அருமையான கருத்து அடிபட்டுப் போய்விட்டது சற்றுக்  கவலை தான்.

என் மகனுக்கு பதினைந்து வயது.  ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறார்.  சனிக்கிழமைகளில் தந்தையுடன்  சேர்ந்து அவர் வேலை செய்கின்ற உணவகத்துக்கு செல்கின்றார்.  அங்கு அவர் செய்கின்ற வேலைக்காக அவருக்கு சம்பளமும் கிடைக்கின்றது.  ஒவ்வொரு மாதமும் 100- 200 யூரோக்கள் சம்பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.  அது மட்டும் இல்லாமல் ஒரு தொழில் பழகியதாகவும் இருக்கிறது .  அத்துடன் செல்போன் இண்டநெட்  என்று சோம்பேறித்தனமாக நேரம் வீணடிப்பதும் குறைகின்றது.  அது மட்டும் அல்லாமல் தாயக சமையல் பழக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.  இப்போது அவருக்கு மீன் குழம்பு வைக்கத்தெரியும்.  சமையல் அறையில் இருக்கும் போது நானும் அவரும் அதிகம் பேசுவோம்.  எம் பேச்சுக்களில் பலவிடயங்கள் அடங்கும்.  அவர் எனக்கு சரித்திர ஆசிரியராக மாறி அதிக விடயங்கள் சொல்லித்தருவார்.  மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்வேன்.

இப்போது விவேக்கிற்கு வருவோம் .  விவேக் நல்ல மனிதர்.  நல்ல கருத்துக்களை மட்டுமே பகிர்பவர்.  அவர் ஒரு ஆணாதிக்க கருத்தை வெளியிட்டது.  ஒரு கணம் அதிர்ச்சி தந்தாலும் சுதாகரித்துக் கொண்டேன்.  நாம் எல்லோரும் ,வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர் உட்பட ஆணாதிக்க சமூகத்தில் வாழ்பவர்கள்.  ஆணாதிக்க மனப்பான்மை என்பது எம் ஒவ்வொருவருக்குள்ளும் புரையோடிப்போய் இருக்கிறது.  ஆணாதிக்க மனோபாவம் என்பது ஆண்களுக்குள் மட்டுமல்லாது பெண்களுக்குள்ளும் தான் புரையோடிப்போய் இருக்கிறது.   இதில் நாம் யாருமே விதிவிலக்கு இல்லை. மற்றவர் ஒரு கருத்தை தெரிவிக்கும் போது இதில் ஆணாதிக்கம் கலந்திருக்கிறது என்று   இனம் காணத்தெரிகிற எமக்கு, எமக்குள் எவ்வளவு வீதம் ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறது என்பது புரிவது இல்லை இந்த விடயத்தில் விவேக்கை கோவிக்ன்ற தகுதியை இதனால் நாம் இழக்கின்றோம்.

அனாலும் சர்ச்சை என்று வந்தது நல்ல விடயம் தான்.  நாகரிகமாக விவாதித்து ஆணாதிக்க மனோபாவத்திற்கு எதிரான நல்ல கருத்துக்களை பகிர்வதற்கு இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம்.  காலம் காலமாக புரையோடிப் போயிருக்கிற ஒரு விடயத்தை அவ்வளவு சுலபமாக  எமக்குள் இருந்து அகற்றி விட முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அகற்ற முடியும்.  அதற்காக இந்த சர்ச்சையையும் ஒரு சிறு கருவியாக பயன்படுத்துவோம்.
விவேக் என்கின்ற நல்ல மனிதனை கொத்திக் குதறுவதை தவிர்த்து விடுவோம்

No comments:

Post a Comment