Thursday 17 May 2018

என் இனிய நினைவுகள்

நான் அப்போது தாயகத்தில் ஆசிரியையாக  இருந்தேன்.  கடைசி இரண்டு வருடங்கள் அம்மா, அப்பா, நான் என்ற அழகான மிகச்சிறிய கூட்டுறவு.  மூவருமாக பாடசாலை வளாகத்தில் உள்ள குவாட்டஸ் இல் குடியிருந்தோம்.
குவாட்டசும் மிகச்சிறியதுதான்.  ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, ஒரு சிறிய சமையலறை அவ்வளவுதான்.   ஆனாலும் மிகவும் அழகானது.  நான் காலையில் எழுந்து பாடசாலைக்கு போய்விடுவேன்.  என் விடுதிக்கும் பாடசாலைக்குமான தூரம் இருபது மீற்றர் கூட இருக்காது.  எனக்கு வேண்டிய தேனீர் காலை உணவு எல்லாவற்றையும் அம்மா தயாரித்து தருவார்.  கடைக்குப் போகிற வேலைகள் எல்லாவற்றையும் அப்பா கவனித்துக் கொள்வார்.   நான் பாடசாலையில் இருக்கும் போது அம்மா மதிய சமையலை கவனித்துக் கொள்வார்.  நான் பதினொரு மணிவாக்கில் தேனீர் இடைவேளைக்கு விடுதிக்கு வருவேன்.   அது பதினைந்து நிமிட இடைவெளி தான்.  எனக்கு தேனீர் குடிக்கும் பழக்கம் இல்லை.  ஆனல் எதாவது சாப்பிடுவேன்.  ஐந்து நிமிடங்களில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு பத்து நிமிடங்கள் அம்மாவுக்கு ஒத்தாசையாக குசினி ஒதுக்கி கொடுப்பேன்.  பின் மீண்டும் பாடசாலை.  மதியம் இரண்டு மணிக்கு முடியும்.  நேரம் கிடைக்கின்ற வேளைகளில் பாடசாலை நூலகத்துக்கு செல்ல தவறுவது இல்லை.  பழைய புத்தகங்களை கொடுத்து விட்டு புதிய புத்தகங்களை மாற்றிக் கொள்வேன்.  அவை அநேகமாக கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்,  பெரிய புராணம்  போன்ற இந்து சமயப் புத்தகங்களாகத் தான் இருக்கும்.  பாடசாலை விட்டு விடுத்திக்கு வரும்போது சாப்பாட்டு மேசையில் மதிய உணவு சுடச்சுட தயாராக இருக்கும்.  அம்மா பாசத்துடன் சமைக்கிற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.

மதிய உணவு முடிந்ததும் நேராக கட்டிலுக்கு போய்விடுவேன்.  நூலகத்தில் இருந்து கொண்டுவந்திருந்த புத்தகங்ககளை கட்டில் மேல் வைத்து விட்டு ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவேன்.  ஒரு பத்து நிமிடங்கள் செல்லுமுன்பே நல்ல சுகமான தூக்கம் ஒன்று வரும்.  எந்த இடையூறும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தூங்குவேன்.  தூங்கி முடித்து எழுந்த உடனேயே குளிக்க வேண்டும் என்று தோன்றும்.  அந்த நேரத்தில் நான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக எனக்கு ஒரு உணர்வு.  அந்த நேரத்தில் யாருடனும் பேசுவதற்கு எனக்கு பிடிக்காது.  அம்மா அப்பாவுடனும் பேசாமடடேன்.  வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்திருந்தாலும் பேசாமடடேன்.   தூங்கி எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் யாரையும் பார்க்காமல் நேரே குளிக்க செல்வேன்.  குளித்து முடித்தவுடனே மறுபிறவி எடுத்தது போல இருக்கும்.  மீண்டும் என் அறைக்கு சென்று தலை சீவி போட்டு பவுடர் பூசி பொட்டு வைத்துக் கொள்வேன்.  அப்போது கண்ணாடியில் என்னை பார்க்கும் போது நான் அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுவேன்.  ஒருமுறைக்கு பலமுறை கண்ணாடி பார்த்து என்னை நானே ரசித்துக்கொள்ளுவேன்.

நான் அறையை விட்டு வெளியே வரும்போது வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தொடங்கி இருப்பார்கள்.  விருந்தினர்கள் என்றால் என்னுடன் கூடப் படிப்பிக்கின்ற மாஸ்ரர்கள் தான்.  அவர்கள் என்னைவிட  வயதிலும் சேவைக்காலத்திலும் இளையவர்கள்.  அவர்களை நண்பர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம் அல்லது தம்பிகள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.  ஆரம்பத்தில் என்னுடைய தம்பிகள் அல்லது நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.  ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் என் அம்மா அப்பாவின் நண்பர்களாக அல்லது மகன்களாக ஆகிவிடடார்கள்.  கேலியும் அரடடையும் கிண்டலுமாக வரவேற்பறை களை கட்டும்.  அம்மா அனைவருக்கும் தேனீர் தருவார்.  அமிர்தம் போல இருக்கும்.  நான் மிகவும் உற்சாகமாக இருப்பேன்.  வரவேற்பறையில் பெரியதொரு இயேசு படம் வைத்திருந்தேன்.  அதை ஒட்டி ஒரு சிறிய மேசையும் இருந்தது.  அந்த மேசையில் பூத்தட்டு, படத்து விளக்கு , செபப்  புத்தகம், பைபிள் என்பன வைத்திருப்பேன்.  அவற்றை மீண்டும்  புதுப்பிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றும்.  நான் எழுந்து அந்த மேசையை துடைத்து பழைய பூக்களை அகற்றி புதிய பூக்கள் இடுங்க செல்வேன்.  பாடசாலை வளாகத்திலேயே ஒரு நித்திய கல்யாணி மரம் இருந்தது.  நான் அதில் தான் பூக்கள் இடுங்குவேன்.  என் விருந்தினர்கள் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.  அவர்கள் அம்மா அப்பாவுடன் தொடர்ச்சியாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.

நான் பூக்கள் இடுங்க நித்திய கல்யாணி மரத்தடிக்கு செல்லும் அதேநேரத்திற்கு ஒரு சிறுமியும் பூக்கள் இடுங்க வருவாள்.  அவள் எதேச்சையாக வருகிறாளா அல்லது என்னைக் கண்டவுடன் வருகிறாளா எனது தெரியவில்லை.  அவள் எனது பாடசாலையில் முதலாம் வகுப்பில் படிக்கிறாள்.  அவளுக்கு நான் ஆசிரியை என்று தெரியாது.  நான் பத்தாம் வகுப்பு ஆசிரியை.  எனவே அவள் பாடசாலையில் என்னைக் கண்டிருக்க வாய்ப்பு இல்லை.  அது தவிர நான் பாடசாலை வேலைகளில் சேலையில் இருந்தாலும் ஏனைய வேளைகளில் கவுனுக்கு மாறிவிடுவேன்.   அவளுக்கு நான் ஆசிரியை என்று தெரியாததால் ஒரு தோழியுடன் உரையாடுவது போல என்னுடன் உரையாடுவாள்.  நீ நான் என்று ஒருமையில் அழைப்பாள்.  வாய் மூடாமல் பேசுவாள்.  ஏதோ ஒரு நாளில் அவளிடம் நான் ஓர் ஆசிரியை என்று சொன்னேன்.  அவள் கடைசி வரையும் நம்பவே இல்லை.  நானும் விட்டு விட்டேன்.  அவளின் அழகான நட்பை இழக்க எனக்கும் விருப்பம் இல்லை.

எந்த அவசரமும் இல்லாமல் நின்று நிதானித்து என் சிறு தோழியுடன் பல கதைகள் பேசி பூப்பறித்துக்கொண்டு விடுதிக்குள் வரும்போது சற்றே சூரியன் மறையத்தொடங்கும்.  நான் பூக்களை படத்தட்டில் வைத்து படத்துக்கு விளக்கு ஏற்றி  வரவேற்பறை மின்விளக்கை ஏற்றும் போது வரவேற்பறை சுத்தமாக, ரம்மியமாக, தெய்வீகமாக காட்சி அளிக்கும்.  அப்போதும் என் மாஸ்டர் தோழர்கள் போய் இருக்க மாட்டார்கள்.  அவர்களின் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும்.  நான் அப்பாவின் கதிரை கைப்பிடியில் வந்து அமர்வேன்.  அவர்கள் உரையாடல்களில் நானும் பங்கு பெறுவேன்.  பின்பு ஒரு கட்டத்தில் அவர்கள் போக மனம் இல்லாமல் எழுந்து போவார்கள். 

நாங்கள் இரவுக்கு என்று புதிதாக சமைப்பது இல்லை.  மதியம் சமைத்து சோறு கறிகளையே சூடு பண்ணி சாப்பிடுவோம்.  எப்போதாவது இரவு சாப்பாடு செய்ய வேண்டி வரும்.  அப்போது நான் நூடில் செய்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பரிமாறுவேன்.

அந்த இனிமையான எளிமையான நாட்கள் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தன.  எனக்கு விசா கிடைத்தது.  என் கணவருடன் இணைவதற்காக நான் பிளேன் ஏறினேன்.  என் பெற்றோரை பிரிந்த அந்த நாள் என் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது போல வேதனை அளித்தது.  என் பிரிவுத் துயரை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.  ஆனாலும் என் கண்கள் கண்ணீர் வடிக்கவில்லை.  என்னை பெற்றவரின் கண்களும் தான்.

என்னை வழியனுப்ப என்று என் மாஸ்ரர் தோழர்கள் வரவில்லை.  அவர்களுக்கு நேரம் இருக்கவில்லையாம்.  ஏதோ அவசர வேலையாம்.  ஆண்கள் அழுதால் அசிங்கம்.  அப்படி அசிங்கப்பட விருப்பம் இல்லாமல் தான் என்னை வழியனுப்ப வரவில்லை என்று பிறிதொரு நாளில் கடிதம் எழுதியிருந்தார்கள்.

என் நித்திய கல்யாணி மரத்தடி குட்டித் தோழிக்கு எதுவும் தெரியாது.  திடீர் என்று நான் காணாமல் போனது அவளுக்கு கவலை அளித்திருக்கும்.  அவள் பல நாட்கள் என்னை தேடி இருக்கக் கூடும்.

புலம் பெயர்ந்து வந்து இருப்பது வருடங்கள் ஆகி விட்டன.  அம்மா அப்பா முதிர் வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.   என் தோழர்கள் அவர் அவர் குடும்பம் என்று ஆகி இருப்பார்கள்.   ஆரம்பத்தில் கடிதப்போக்குவரத்து இருந்தது .  பின்பு அது நின்று விட்டது.  தொடர்பு இல்லாவிட்டாலும் இன்னும் இதயத்தில் குடியிருக்கிறார்கள்

No comments:

Post a Comment