Wednesday 17 April 2013

திணிக்கப்படாத கலாச்சாரம்

எம் கலாச்சாரம், பண்பாடு என்ற பதங்கள் புலத்தில் வாழும் தமிழர் மத்தியில் அடிக்கடி பயன்படுத்தப் படும் சொற்க்கள் ஆகும்.  தாயகத்தில் இருந்தவரையில் கலாச்சாரம் பண்பாடு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவ்சியம் இருக்கவில்லை.  ஏனென்றால் நாம் அதற்குள்ளேயே வாழ்ந்தோம்.  தண்ணீருக்கும் மீனுக்கும் உள்ள உறவு போல எமக்கும் எம் கலாச்சாரத்துக்குமிடையே உறவு இருந்தது.  ஆனால் புலத்தில் நிலமை எதிர்மாறாக இருந்தது.  அதனால் கலாச்சாரம் பண்பாடு பற்றிய கவலையும் புலம்வாழ் தமிழரை வாட்டி  வதைத்தது.  நியாயமான கவலையே.  புலத்தில் வாழும் எம் சந்ததிக்கு எதுவிதப்பட்டும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்திவிடவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினோம்.

இது ஒர் கட்டத்தில் கலாச்சாரத் திணிப்பாக மாறிப்போயிற்று.  இதில் அதிகம் அவஸ்த்தைப் படுவது சம்பந்தப்படும் எம் பிள்ளைகள்தான்.  மேலைத்தேயச் சூலலை விட்டு பெரிதும் விலகி நிற்கும் எம் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க அவர்கள் பெரிதும் சிரமப் பட்டார்கள்.  வீட்டில் ஒரு வாழ்க்கையும் வெளியே ஒரு வாழ்க்கையும் என இரட்டை வாழ்க்கை வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.  இந்தக் கலாச்சாரத்திணிப்பும் இரட்டை வாழ்க்கையும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு சிறுவர் பராமரிப்பாளராக சிறுவர் மீது அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது திணிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  இந்த விடயம் சதா என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையை, வாழ்க்கை முறையை தாமே தேர்ந்தெடுத்து வாழ்வதற்கேற்றவாறு தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  என் மன ஓட்டதிற்கு ஆறுதல் தருவது போல ஒரு சம்பவம் என் சூழலில் நடந்தது.

அந்த யுவதியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்.  தன்னுடைய பாடசாலைக் காலங்களில் எல்லாம் ஐரோப்பிய நாகரீகத்திலும், வாழ்க்கை முறையிலும் அதிக ஆர்வம் காட்டினார்.  தமிழர் என்றால் பட்டிக்காடுகள், நாகரீகம் தெரியாதவர்கள் என அபிப்பிராயம் கொண்டிருந்தார்.  தமிழர்களுடன் பழகுவதில் அலட்சியம் காட்டினார்.  இதனால் சூழ உள்ள தமிழர் மத்தியில் ஒரு விமரிசனப் பொருளானார்.

ஆனால் சமீபத்தில் அவர் பற்றிய செய்தி ஒன்று என்னை ஒரு முறை உலுக்கியது.  எல்லாம் மகிழ்ச்சியான உலுக்கல்தான்.  அவர் இப்போது திருமணமாகி தாயகத்தில் வாழ்கின்றார்.  ”என் மகள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து வாசல் தெழித்து சுத்தம் செய்து, குளித்து, சாமி கும்பிட்டு வேலைக்குச் செல்கின்றார்” ,என அவருடைய தாயார் பெருமிதமாக தன் மகளைப் பற்றிக் கூறினார்.  எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

புலத்தில் இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய தாயார் எம் கலாச்சாராத்தை தன் மகள் மீது திணிக்கவும் இல்லை, அந்த மகள் அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  தானே வாழ்ந்து பார்த்து தன் அனுபவ அறிவில் எம் கலாச்சாரத்தின் சிறப்பறிந்து அந்தக் கலாச்சாரத்தில் வாழ்வதற்க்காக துணிவுடன் முடிவெடுதிருக்கின்றார்.  அவரின் துணிச்சலுக்காக ஒரு கணம் தலை வணங்குகின்றேன்.

எம் கலாச்சாரத்தை புலத்தில் வாழும் எம் சந்ததிக்குத் திணிக்காமல் தமக்குரிய வாழ்க்கை முறையை அவர்களே தேர்ந்தெடுப்பதற்க்குச் சந்தர்ப்பமும் கால அவகாசமும் கொடுப்பது ஆரோக்கியமானது என் நான் கருதுகின்றேன்.




No comments:

Post a Comment