Wednesday 4 March 2015

சாரதா என்னும் தேவதைக்கு ஒரு பரிசு

சாரதா என்ன செய்தாலும் அழகுதான்.  மிகவும் சுறுசுறுப்பாக சுத்தமாக எல்லா வேலைகளையும் நேர்த்தியாகச் செய்வாள் .  என் சாரதாகூட  அழகுதான்.  அழகு என்றால் கூரியமூக்கையும் சிவந்த உதடுகளையும் குறிப்பிடவில்லை. அடக்கமாக கம்பீரமாக செய்யும் வேலைகளுக்கு இடஞ்சல் இல்லாமல் உடையணியும் விதம்;  எப்போதும் புன்னகை தவழும் சாந்தமான முகம் இவற்றைதான் குறிப்பிட்டேன்.

பொருளாதாரம் என்பது எனக்கு எந்தக்காலத்திலும் பிரச்சினையாக இருந்ததில்லை.   ஆனாலும் இந்த உடலாரோக்கியம்தான் தொல்லையாகிப்போனது.  எழுபது வயதில் இந்த சக்கர நாற்காலி எனக்கு அதிகம் தான்.  என் சொந்தத் தேவைகளிற்கு எல்லாம் பிறரை எதிர்பார்த்திருக்கவேண்டியது என் துர்ப்பாக்கியம்.  இதுதான் நியதியென்றால் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

எனக்கு உடம்புக்கு முடியாமல் போனதன் பின்பு சாரதாதான் எனக்கு எல்லாமே.  என்னுடைய அத்தனை தேவைகளையும் பகல் முழுவதும் அவள்தான் பூர்த்தி செய்கின்றாள்.  நான் இயற்கைக் கடன் கழிக்க உதவி செய்வது, என்னைக் குளிக்க வைப்பது, எனக்கு உடைமாற்றிவிடுவது, எனக்கு உணவு தயாரித்து பரிமாறுவது எல்லாமே சாரதாதான்.  என்னைக் கவனிப்பதுடன் நின்றுவிடாது பரபரவென்று என் அறையச் சுத்தம் செய்து சமையலைக் கவனித்து என்று எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.

இந்த வேலைகள் எல்லாம் அவளுக்குச் சற்று அதிகமோ என்று எனக்கு எப்போதும் சற்று நெருடலாக இருக்கும்.  அதனால்தான் சாப்பாட்டு வேளைகளில் விடாப்பிடியாக அவளை என்னருகில் இருந்து நிதானமாகச் சாப்பிட  வற்புறுத்துவேன்.  சாப்பாட்டு வேளைகளில் நாம் அதிகம் பேசுவோம்.

சாப்பாட்டு வேளையில் என்ன, அவள் பரபரப்பாகச் சமைக்கும் வேளையிலும் இருவரும் நன்றாகப் பேசிக்கொள்வோம்.  எங்களுடைய பேச்சுக்களில் என்னுடைய பழங்கதைகள், அவளுடைய பழங்கதைகள், என்னுடைய பிரச்சனைகள், அவளுடைய பிரச்சனைகள்எல்லாம் இடம்பெறும்.  ஏன் சினிமா விமரிசனம் கூட இடம்பெறும்.  சுருக்கமாகச் சொல்லப்போனால் சிறந்த தோழிகள் போல உரையாடுவோம்.

சாரதா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.  சாரதாவைப் பார்த்த மாத்திரத்திலேயே பாதி உடல் உபாதைகள் குறைந்ததுபோல இருக்கும்.  சட்டென்று நான் நோயில் விழுந்து சக்கர நாற்காலிக்குள் முடங்க்கியபோது என்னை யார் கவனிப்பது என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து நின்றது.  தினமும் வேலைக்கென்று வெளியே செல்கின்ற மகனும் மருமகளும் என்னை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார்கள்.  என்னைப்  பராமரிப்பதற்குஎன்று சம்பளத்திற்கு ஆள்  அமர்த்துவோம் என்ற யோசனையை முன்வைத்தது நான்தான்.  அப்படி சம்பளத்திற்காக என்னைப் பராமரிக்க வந்தவள்தான் இந்த சாரதா என்னும் தேவதை.  அவள் ஒன்றும் தெரியாத மனுசி இல்லை .  தூரத்து உறவுக்காறி .  பொருளாதாரம் என்பது எப்போதும் அவளுக்கு பிரச்சனைதான்.  அதனால்தான் கேட்ட மாத்திரத்தில் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.

வாங்குகின்ற சம்பளத்துக்கு மேலாக மனம் ஒன்றி வேலை செய்பவளை யாரால்தான் வெறுக்கமுடியும்.   மாதம் முடிய சம்பளம் கொடுப்பதுடன் தம் வேலை முடிந்து விட்டது என்று மகனும் மருமகளும் நினைப்பார்கள்.  ஆனால் எனக்குதான் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியவில்லை.  சக்கர நாற்காலிக்குள் முடங்கிய என்வாழ்கையைக்கூட  தன அற்புத நட்பால் சுவாரசியமாக்கினவளுக்கு  நானும் ஏதாவது செய்ய வேண்டுமே.

என்னைப் பார்க்க வருகின்றவர்கள் கொண்டுவருகின்ற பழங்கள் தின்பண்டங்கள் என்பவற்றில் பாதி அவளுக்கென்று எடுத்துவைத்துவிடுவேன்.  மாலை வேலைமுடிந்து போகும்போது அவள் பிள்ளைகள் அவள் கையைப் பார்ப்பார்களே.  அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து என்னைப்பார்க்க வருகின்ற உறவுக்காரர்கள் என் கைக்குள் வைக்கின்ற டொலர்கள், யூரோக்கள், பவுண்ஸ்கள் என்பவற்றிலும் ஒருபகுதி அவளுக்கென்று ஒதுக்கிவிடுவேன்.

கணவன் துணையில்லாமல் நான்கு பிள்ளைகளை வளர்த்தவள் மூத்தவளின் திருமணத்திற்கென்று சற்றுச் சேமிக்கட்டுமே.

No comments:

Post a Comment