Sunday 20 August 2017

பிக் பாஸ் சினேகன்

பிக் பாஸ் சினேகன்

சினேகன் உங்களை முற்றிலும் வெறுத்து ஒதுக்க முடியவில்லையே.

காயத்திரி, யூலி, ரைசா, நமீதா கூட்டத்துடன் உங்களை சேர்க்க முடியவில்லையே
.
உங்கள் கட்டிப்பிடி வைத்தியம் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பார்க்க சகிக்கமுடியவில்லை.  அருவருப்பாகத்தான் இருக்கிறது.  அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை.  ஆனாலும் இத்தனை கோடி மக்கள் வெறுக்கிறார்கள்.  அருவருப்புடன் பார்க்கிறார்கள்.  வெளியே வந்தபின்பு இது  பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

பரணி விடயத்தில் நீங்கள் செய்ததெல்லாம் தவறு.  இரக்கமற்ற செயல்.  இன்று வரை உங்களுக்கு அது தவறாக தெரியவில்லை.  அதனால் மன்னிப்பும் கேட்கவில்லை.

புறணி பேசுகிறீர்கள்.  முகத்திற்கு முன் ஒன்றும் முதுகிற்குப் பின் ஒன்றும் பேசுகிறீர்கள்.     அதை நான் மன்னிக்கிறேன்.    வேறு எந்தப் பொழுது போக்கும் இல்லாத நிலையில் அதை விட்டால் வேறு என்னதான் பேசுவது.  அதை நீங்கள் புறம் பேசுவது என்று ஒத்துக்கொள்ளவில்லை.  அது ஒரு அலசி ஆராய்தலாக எடுத்துக்கொள்ளலாம்.  அதிலும் நீங்களும் வையாபுரியும் சேர்ந்து கதைக்கிற கதைகள் அறிவு பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன. சுஜா வருணி   வந்த முதல்நாள் கணேஷ் உதவி செய்யப்போக நீங்களும் வையாபுரியும் அதை கொச்சைப்படுத்தி நகைச்சுவை என்ற பேரில் வையாபுரி கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பட்டுப்பாட நீங்கள் அதை ரசித்து இருவருமாக சேர்த்து வைத்த மரியாதை எல்லாம் இழந்து போனீர்கள்.

இவ்வளவு குறைகள் இருந்தும் உங்களை பூரணமாக வெறுக்க முடியவில்லை சினேகன்.  காரணம் உங்களுக்குள் ஒரு அழகிய கிராமத்து மனிதன் இருக்கிறான்.  கூட்டுக்குடும்ப வாழ்வின் பெறுமதிகளை நீங்கள் இங்கே பிரதிபலிக்கிறீர்கள்.  தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு சமைக்கிறீர்கள்.  சாப்பிட மனமில்லாமல் படுத்திருக்கிற சகோதரிகளுக்கு தட்டில் சாப்பாட்டைப் போட்டு அவர்களிடம் எடுத்துச் செல்லுகிறீர்கள்.  சாப்பிடும்படி வலியுறுத்துகிறீர்கள்.

யூலியின் திருகுதாளங்களை கமல் குறும்படம் போட்டுக்கட்டிய நாள் அது.  யூலிதான் குற்றவாளி ஓவியா குற்றமற்றவள் என்பதை நீங்கள் பூரணமாக நம்புகிறீர்கள்.  யூலி அழுது கொட்டுகிறது.  நீங்கள் அரவணைத்து சமாதானப் படுத்துகிறீர்கள்.  ஓவியா எங்கோ  தூரத்தில்   இருந்து கோபமாக கத்துகிறாள்.  "நீங்கள் இப்போதுகூட அவள் பக்கம்தான் நிற்கிறீர்கள்"  அப்போது நீங்கள் ஓவியாவுக்கு சொன்ன பதில் இன்னும் என் மனதில் நிற்கிறது.  "ஓவியா , அவள் அழுகிறாள் ஓவியா"  ஓவியாவுக்கு நீங்கள் சொன்ன பதில் இதுதான்.
இது எத்துணை ஆழமான வசனங்கள்.  ஒருத்தி தப்பு பண்ணியிருக்கிறாள்.  அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறாள்.  அந்த நேரத்தில் அவளுக்கு அரவணைப்பு தேவை.  அதை நீங்கள் ஒரு பாடமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.  ஒரு பெரிய குடும்பத்தின் அழகிய பெரிய அண்ணனாக நீங்கள் நின்றீர்கள் .

அடிப்படையில் ஓவியாவை உங்களுக்கு பிடிக்காது.   ஆனாலும் அவள் தனித்து தவித்து மரண அவஸ்தை அனுபவித்த நேரத்தில் அவளை ஒரு சிறு குழந்தையை போல் தாங்கினீர்கள்.  அவளுக்கு ஓர் அன்னை ஆனீர்கள்.  தட்டில் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடும் வரை காவலிருந்து தலையை வருடிவிட்டு, எல்லாமே அழகு செயற்பாடுகள்.  சிறு குழந்தைக்கு சொல்வது போல அவளுக்கு சிங்கம் சிகரற்று பிடித்த கதை சொன்னிர்கள்.  அவள் சிரிக்கும் அழகை பார்த்து மகிழ்ந்தீர்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் அறையில் அவள் படுக்க இயலாமல் அவதிப்பட்ட வேளையில் அவளை சாந்தப்படுத்தி ஆண்கள் அறையில் படுக்கவைத்தீர்கள்.  உங்கள் கால்களில் தலையை வைத்து அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.  துளியும் காமம் கலக்காத செயற்பாடு அது.  அதை யூலி அடுத்த அறையிலிருந்து கொச்சைப் படுத்தியது  உங்களிற்கு இன்னும் தெரியாது.  ஓவியா வெளியேறிய பின்பு அவளுக்காக நீங்கள் வடித்த கண்ணீர் நாடகமாக எனக்கு தெரியவில்லை.

அதிகம் சந்தர்ப்பங்களில் நீங்கள் கிராமத்து மணம் கமழும் அன்பான பெரிய அண்ணனை படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.  உங்கள் குறைகளையும் தாண்டி உங்கள் இயல்பான அன்பான அனுபவமான பக்கங்கள் எனக்கு தெரிவதால் உங்களை எனக்கு வெறுக்க முடியவில்லை 


Saturday 19 August 2017

நாம் தீய சக்தியை நாடிப்பு போகின்றோமா அல்லது நல்ல சக்தியை நடிப்போகின்றோமா ?

மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரா கணேஷ் வெங்கட் ராமன்.  உங்களைக் குற்றம் சாட்டுவது எனது நோக்கமில்லை.  ஒரு உதாரணத்துக்கு தான் உங்களை தேர்வு செய்கின்றேன்.  நீங்கள் நல்லவர்தான், பண்பாடு தெரிந்தவர் தான்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவும் காயத்திரியும் ஒன்றுக்கொன்று எதிரான  சக்திகள்.  ஓவியா மென் குணம் கொண்டவள்.  காயத்திரி வன் குணம் கொண்டவள்.   ஓவியா நற்குணங்களின் உறைவிடம்.  காயத்திரி துர்குணங்களின் உறைவிடம்.  ஓவியா உலகமே ஆராதிக்கும் ஒருத்தி.  காயத்திரி உலகமே வெறுக்கும் ஒருத்தி. இது வெளியே உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கிற அளவுக்கு உள்ளே இருக்கிறவர்களுக்கு விளங்கவில்லை.  போகட்டும் அந்த நிகழ்ச்சியின் அமைப்பு அப்படி.  காயத்திரியுடன் யூலி,  நமீதா, ரைசா போன்றோர் கூட்டு சேருகின்றார்கள்.  ஆச்சரியம் இல்லை.  அவர்கள் குணங்களும் காயத்திரியின் குணங்களும் ஒத்துப் போக கூடியவை தான்.

எனக்கு மிகவும் ஆச்சரியம் தருவது கணேஷ் வெங்கட்ராமன் போக்குததான்.  மிகவும் நல்ல அப்பாவியான மனிதர்.  சண்டை சச்சரவுக்குப் போகாதவர்.  நல்ல பண்புகளைக் கொண்டவர். அது எப்படி காயத்திரியின் துர்க்குணங்களை துளி கூட இனம் காணாமல் இருக்கிறார்.  யூலி செய்வது எல்லாமே தவறு என்று தெரிந்தாலும் அதை பெரிது பண்ணாமல் நொடிப்பொழுதில் அவளை மன்னித்து எதுவும் நடக்காதது போல ஏற்றுக்கொள்ளுகிறார்.

ஓவியா போன்றதொரு positve energy ஐ துளியும் இனம் காணாமல், புரிந்து கொள்ளாமல்,  அவளின் கடைசி நேர அவல நிலைக்கு சற்றும் அனுதாபமோ இரக்கமோ ஏற்படாமல் இருக்கிறார்.  விடை காண முடியாமல் நான் அவதிப்படுகின்ற கேள்விகள் இவை.  ஆரம்பத்தில் சொன்னதைத் தான் திரும்பவும் சொல்கிறேன்.  கணேஷ் வெங்கட்ராமனை ஒரு உதாரணமாகத் தான் எடுத்தேன்.  (மன்னித்துவிடு சகோதரா )  பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே எம்மில் எத்தனைபேர் இப்படி நல்ல சக்திகளை இனம்கண்டு அவற்றுடன் சேராமல் தீய சக்திகளால் கவரப்பட்டு கட்டுண்டு கிடக்கிறோம்.  இப்படியான போக்கு எம்மில் பல பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். கணேஷ் வெங்கட் ராமன் இடத்தில் எம்மை வைத்து ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Tuesday 15 August 2017

பிக் பாஸ் வீட்டில் பேயாம்

 இது ஒரு task ஆம்.  பிக் பாஸ் வீட்டில் பேய் இருக்கிறது என்று எல்லோரும் சேர்ந்து பிந்து மாதவியையும் கணேஷையும் ஏமாற்றுகின்றார்கள்.  அது ஒன்றும் சுவாரசியமாக இல்லை.  இதில் எனக்கு உடன்படும் இல்லை.  ஒரு வேளை பிந்து மாதவி அதீத பயந்த சுபாவம் உள்ளவர் என்றால் அது அவரின் நிம்மதியை நிரந்தரமாக கெடுத்துவிடும்.  என்னதான் தர்க்கவாத அறிவு பேய் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் பயமுறுத்தும் சூழ்நிலைகள் பயத்தைக் கொடுக்கத்தான் செய்யும்.

இன்றைய நாளிலே நான் ரசித்தது கணேசினதும் பிந்து மாதவியினதும் நாகரீகமான நடத்தைகளைத் தான்.  முதல்நாள் தான் சினேகன் கணேஷை எலிமினேஷன் இற்காக நோமினேட் செய்கிறார்.  அந்த வருத்தத்தை சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் தேவையில் உடனிருக்கிறார்.  ஆறுதல் வார்த்தை சொல்கிறார்.  நாலு நல்ல வார்த்தை கூறுகின்றார்.  முதல் முதலாக நான் கணேசினால் கவரப்பட்டேன்.  அவர் என்னதான் mr. clean ஆக இருந்தாலும் காயத்திரி போன்ற தீய சக்திகளை இனம் காணாததில் எனக்கு அவர் மீது தொடர்ச்சியான வருத்தமே இருந்தது.  இப்போது முதல் முறையாக அவர் பற்றி நல்லெண்ணம் வருகிறது,

பிந்து மாதவிக்கு உள்ளே பயம் இருந்தாலும் நிலைமையை நாகரீகமாக சமாளிக்கிறார்.  over acting இல்லை; சுடு சொல் இல்லை;  கேலி கிண்டல் இல்லை;  நிதானமாக இருக்கிறார்.  இதனால் எனக்கு அவரையும் பிடிக்கிறது.