Tuesday 3 March 2015

என்னுயிர் அப்பா

அம்மா காலை ஏழு மணிக்கே வேலைக்குச் சென்று விடுவார்.  அப்பாவுக்கு காலை பத்து மணிக்குத்தான் வேலை.  அதனால்  காலை வேளைகளில் எனக்கான வேலைகளைப் பெரிதும் அப்பாதான் செய்கின்றார்.  காலையில் அப்பா என்னை மிகவும் அன்பான மிருதுவான அதே நேரத்தில் உற்சாகம் தரக்கூடிய குரலில் எழுப்புவார்.  இரவு எட்டு மணிக்கே என்னுடைய அறையில் அமைதியான சூழலில் உறங்க்கச் சென்றுவிடுகின்றேன்.  அதனால்தான் காலை வேளைகளில் என்னைத் துயில் எழுப்புவது அப்பாவுக்கு ஒருபோதும் சிரமமாக இருப்பதில்லை.

காலை துயில் எழுந்ததும் காலையுணவுதான்.  பால் பழம் ரொட்டி என்று அப்பா காலையுணவு மேசையை அழகாகவே வைத்திருப்பார்.  மேசையைப் பார்த்தவுடனேயே சாப்பாட்டு ஆசை வந்துவிடும்.  அப்பாவும் நானும் சாப்பாட்டு மேசையடியில் இருந்து சாப்பிடுவோம்.  சாப்பாட்டுத் துண்டை எடுத்துக் கொண்டு வீடு முழுக்க ஓடுவதோ தொலைக் காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதோ அப்பாவுக்குப் பிடிக்காத விடயம்.  அதற்கெல்லாம் அப்பா என்னை அனுமதிப்பதே இல்லை.  ஆனாலும் சாப்பாட்டு வேளையில் அப்பா எனக்குப் பிடித்தமான விடயங்களைப்பற்றி உரையாடுவார்.  காலையுணவு முடிந்ததும் அப்பா சாப்பாட்டு மேசையை ஒதுக்குவார்.  குட்டி குட்டியாக நானும் அப்பாவுக்கு உதவி செய்வேன்.

அதன்பின்பு பல் துலக்கும் படலம்.  அப்பாவும் நானும் பல் துலக்குவோம். எந்த வேலையையும் அப்பாவுடன் சேர்ந்து செய்வதால் அது எனக்கு நல்ல முன் மாதிரிகையாக அமைந்துவிடுகின்றது.   காலையுணவு உண்ணும்போதென்ன பல் துலக்கும்போதென்ன நான் விடும் தவறுகளை அப்பா உடனுக்குடன் திருத்திவிடுகின்றார்.

பல் துலக்கி முகம் கழுவி முடிந்தபின்பு அப்பா நான் உடைமாற்ற உதவி செய்வார்.  தானும் உடைமாற்றிக்கொள்வார்.   அதன்பின் தன்னுடைய காரில் ஏற்றி என்னை என் பாலர் பள்ளியில் விட்டுவிடுவார்.  பாலர் பள்ளியில் என்னுயரத்திற்குத் தன்னை மடித்து உட்கார்ந்து  என் நெற்றியில் மிருத்துவாக முத்தமிட்டு விடைபெறுவார்.

போதிய நித்திரை, போதிய காலையுணவு,  எல்லாவற்றிற்கும் மேலாக அப்பாவின் நேர்த்தியான கவனிப்பும் ஆண்மை நிறைந்த அரவணைப்பும் எனக்கான நாளைச் சீராகத் தொடங்க வழிவகுக்கின்றன.

இப்போது நான் ரெம்பச் சின்னவன்.  அதிகம் விடயங்கள் எனக்குப் புரிவதில்லை.  நான் சற்றுப் பெரியவனானதும்  இவர் என் சொந்த அப்பா இல்லை என்பதையும், என் சொந்த அப்பா நான் கருவறையில் இருந்தபோதே  அம்மாவைப் பிரிந்து சென்றுவிட்டதையும் என் அம்மா எனக்குச் சொல்லித் தரக்கூடும்.  அப்போது என் (வளர்ப்பு )அப்பா மீதான அன்பும் மரியாதையும் எனக்குள் பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கும்.   கால  ஓட்டத்தில் நான் சக்தி பொருந்திய வாலிபனாகவும் அப்பா பலவீனமான முதியவராகவும் மாறும்போது  என் அன்பு அப்பாவை இரட்டிப்பான அன்பு மழையிலே திக்குகுக்காடச்  செய்வேன்.


No comments:

Post a Comment